இறுதிப் போரில் மனித உரிமை மீறல்களும், போர்க்குற்றங்கள் நடக்கவே இல்லை. இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் போலியானவையாகும்." - இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.
அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் மற்றும் படையினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டு ஆகியன தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்பதை அடிப்படையாகக்கொண்டே ஜெனிவாவில் 30/1 யோசனை முன்வைக்கப்பட்டது.
போர்க்குற்றம், மனித உரிமை மீறல் உட்பட இலங்கைக்கு எதிராக 8 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவை போலியானவையாகும். குறிப்பாக போரின் இறுதிகாலகட்டத்தில் வடக்குக்கு திட்டமிட்ட அடிப்படையில் உணவுப்பொருள்கள் வழங்கவில்லை, நிறுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டும் அதில் உள்ளடங்குகின்றது.இது அப்பட்டமான பொய்யாகும்.
மூன்று மாதங்களுக்குத் தேவையான பொருள்கள் இருந்தன என்று முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச அதிபராக இருந்த இமெல்டா சுகுமார் கூறியிருந்தார். அதற்கான சாட்சியும் இருந்தது.
ஆனால், குற்றச்சாட்டுகளை ஏற்கும் வகையில் மங்கள சமரவீர ஜெனிவாவில் செயற்பட்டார். பரணகம குழுவுக்கு, சர்வதேச போர்க்குற்ற நிபுணர்கள் அறுவர் அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தனர். நாம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என எழுதியிருந்தனர். இப்படியான அறிக்கைகள் இருந்தும் ஜெனிவாவில், போர்க்குற்றங்களை ஏற்கும் வகையில் மங்கள சமரவீர இணை அனுசரணை வழங்கினார். இதனால்தான் இலங்கைக்கு சார்பாக செயற்படும் நாடுகளுக்குகூட மௌனம்காக்கவேண்டியேற்பட்டது. நாம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை.
அதேவேளை, நாடு மீது துளியளவு பற்று இருப்பவர்கள்கூட, 13ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என கூறமாட்டார்கள். கடந்த 2 ஆயிரம் 500 வருடங்களில் நாட்டின் ஒருமைப்பாட்டைக்காப்பதற்காக எமது மூதாதையர்கள் உயிர்த் தியாகம்கூட செய்துள்ளனர்.
13 என்பது எமக்கு இந்தியாவால் பலவந்தமாக திணிக்கப்பட்டதொன்றாகும். இதன்மூலம் நாடு கிட்டத்தட்ட சமஷ்டிக்குட்படுத்தப்பட்டது. ஜனாதிபதியிடம் நிறைவேற்று அதிகாரம் இருப்பதாலேயே சமஷ்டி முறைமை உருவாவதை தடுக்ககூடியதாக இருக்கின்றது.
13 இன் பிரகாரம் காணி அதிகாரம் முதலமைச்சரின்கீழ்தான் வரும். தொல்லியல் விடயதானங்களும் அவரின் கீழ் வந்துவிடும். அதேபோல் பிரதி பொலிஸ்மா அதிபரும் முதல்வரின் கீழ் வந்துவிடுவார். அப்படியானால் 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தினால் சமஷ்டி முறைமை உருவாகிவிடும். அதனால் 13 நிச்சயம் இல்லாதொழிக்கப்படவேண்டும். அது வெள்ளை யானை என்பது உறுதியாகிவிட்டது.
நாட்டு மக்கள் எமக்கு நிச்சயம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை வழங்குவார்கள் என நம்புகின்றோம். ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் எமது கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளனர். 19, 13 ஆகிய விடயங்களை திருத்தியமைப்பதற்கே எமக்கு மூன்றிலிரண்டு பலம் தேவை. அவ்வாறு கிடைக்கும் பலத்தை ஜனாதிபதி ஒருபோதும் தவறாக பயன்படுத்தமாட்டார்" - என்றார்.